நாவல்...!
பெட்டகத்தில் அடைகாக்கும் புத்தகத்தின் வாசம்,
என்னை தொட்டு திண்ணக் கேட்கிறது..!
உத்திர தோள்தாங்கும் -
தேக்குமர பாளிகளாய்,
அடிநெஞ்சில் வாசம் செய்யும்,
தென்பாண்டி தேசம் அவள்..!
இளவேனில் காலைகளின் திங்கள் முகம் -
நாணும் மௌனம் அவள் முன்னுரை..!
நெறிகெட்டி உடைத்து ஒழுகும்
கனத்த மேகம் அவள் மனக்குகை..!
தூரத்து முகம் காட்டி,
தொடுதூரம் விரல் நீட்டி,
பால் உண்டு, மஞ்சம் கூடி,
விந்துண்ணும் பிண்டமாய்,
கரு சுமந்தாள் என்னையே..!
முக்காலம் உருண்டோடும்,
முழுமதியும் கரைந்தோடும்..!
வானம் பார்த்த பூமி உண்டு,
ஈரம் இல்லா சாமியுண்டு...!
காவு ஈந்து பொங்கவச்சி
வேண்டி நிற்கும் சாதியுண்டு...!
இடைநிறைத்த காலம் தாண்டி,
விரல் கோர்த்த தந்தையுண்டு..!
தீராத உறவுகளும், நிழல் தூங்கும் திண்ணைகளும்,
ஏராளம் ஊரில் உண்டு..!
வடு உண்டு, வலி உண்டு..
வற்றா கானல் ஓடும் கரிசல் ஓடை உண்டு...!
திருவிழா கூடங்களும்,
திரிசங்கு மாடங்களும் !
மணிதுளிக்கு ஒன்றாய் நிறம் மாறும்
காலங்களும் கதை செல்லும்...!
தாசியும், தாரமும் -
தாய் உண்ணும் சேயுமாய் !
மங்கையின் ஆழம் உண்டு,
முந்தானை நீளம் உண்டு..!
பாடம் தொலைத்து, பாதைமாறி
கலிதீண்ட காமம் சாடி..
வீரம், ஈணம், துரோகம் கூடி,
விரயமாகும் மனித ஓடம்..!
சலனமில்லா காணல் மேலே
பயணமாகும் காதை இங்கே..!
அன்றாட மாந்தரும் நெஞ்சோடு கூடுவார்,
ரீங்கார கோர்வையாய் நெடுநாவல் ஓடிடும்..!
கதைகள் யாவும் கதைகளல்ல
கரு உடைக்கும் மழலைதானே..!
விதைகளாய் மனம் விதைத்தால்,
நரம்பிலும் ஊறிச்சாகும் !
கதைகளும் உதிரம் ஆகும்..!
சுந்தர்.ப
No comments:
Post a Comment