Jan 14, 2014

திருவிழாக் காத்தாடி !!



திருவிழாக் காத்தாடி !!

அப்படியும் இப்படியுமா, வருஷம் ஆறு ஓடிடுச்சி !
ஆறாத தடம் ஏதோ, அடிநெஞ்சுல தேங்கிடிச்சி !  
தூரத்துக் கிராமத்துல, கொல சாமிக் கோயிலில !
உரிக் கம்பும், தோரணமும், ராட்டின காரனுமா !
திருவிழாக் கூட்டத்த, கூத்தாடித் தாங்களிச்சோம் !
காத்தாடி தாங் கெறங்க, விரல் கொஞ்சம் வங்கிடிச்சி !
தொட்டு வச்ச மஞ்சக்கறை, புது சட்டையில மாறேல !
குறையாம நான் நெறச்ச, வீதி இன்னும் தீரல !
கடை கன்னித் தோரணமும், களியாட்டக் கூடரமும் !
மேளதாளம் வாய் முழங்க, செண்பகப்பூ ஊர் மணக்க !
அருள் வாக்கு பஞ்சமில்ல, வாரித்தர சாமி உண்டு !
கடுகும் சிந்தாத காலடி ஓடையில  !
தெரியாம நான் தொலைச்ச, எங் கைவிரல் ரேக ஒன்னு !
புதுசட்டை மஞ்சையைத் தான், முகம் பூரா அப்பிக்கிட்டு !
முறை ஒன்னு சொல்லிக்கிட்டு, முன் சிரிப்ப சிந்திக்கிட்டு !
காத தூரம் ஓடி நின்னு,
சொப்பணத்துக் கூச்சலில, கதை  சொல்லிப் பாடுது !
காலடி தடங் கலைஞ்ச வீதி என்ன தேடுது !!

- சுந்தர் .ப 

Jan 12, 2014

கண்ணன் எனும் ஓர் தேவன் !!



கண்ணன் எனும் ஓர் தேவன் !!
- சுந்தர்.ப

ஆயன் ஓர் மாயனும், கார்முகில் மேய்ப்பனாம்,
காலத்தின் பாய்ச்சலாய், இருகரை கோர்க்கிறான் !

குடம் ஓன்றும், மடி ஒன்றில் பிள்ளை இவன்,
இரு நிழலாடும் கன்னித் தாய்க்கு மகன் !

முள்முடிப்  பீழிகையில் பேதம் இல்லை,
கோவர்த்தனம், முகடு அதுவும் தூரம் இல்லை !

கண்மூடி வித்தை சொல்வான் இங்கு ஒருவன்,
தனை மறித்தும், விழி அவிழ்வான் நம் இறைவன் !

வெண்ணிற மண்ணும் இதழ் வடித்து,
ரசம் என்னும் கோப்பைக்குள் தனை நிறைப்பான் !

ஆழ்நிலை தியான மௌனம் உடைத்து,
ஊழ்வினை அனுபவப் பயிர் விதைப்பான் !

மானிட மந்தையின் களி துடைத்து,
பூங்குழல் இதழ்ச் சிந்தும் பாட்டிசைப்பான் !

படைத்தவன் முதல்வனாய் கண்ணில் நிற்ப்பான்,
படைப்பின் பாவம் தன்னில் சுமப்பான் !  

படைப்பில் இரு பிழை இதுவென்றால்,
பிழை தின்னும் பட்சினி நானும் தானே !

இரு பிழை திருத்தம் செய்து கொண்டேன்,
முந்தினோன் கரம் எனை ஈந்தேன் !!

- சுந்தர்.ப